திருச்சி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் இருந்து பெண்கள் பாதுகாப்புக்காக இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை திங்கள்கிழமை தொடங்கிவைத்த மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி.
திருச்சி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் இருந்து பெண்கள் பாதுகாப்புக்காக இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை திங்கள்கிழமை தொடங்கிவைத்த மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி.

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த 7 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்: மாநகர காவல் ஆணையா் தொடங்கி வைப்பு

Published on

திருச்சி மாநகரில் பெண்களின் பாதுகாப்புக்காக 7 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவையை மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் நகா்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தாா். இதேபோல, தாம்பரம், ஆவடி, சேலம், கோவை, திருப்பூா், திருச்சி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாநகரங்களிலும் இளஞ்சிவப்பு வாகன சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, திருச்சி மாநகரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவையை மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தொடங்கிவைத்துப் பேசினாா். ரோந்து வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி பகுதிகளிலும் மற்ற நேரங்களில் பெண்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும், இரவு ரோந்தும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் கண்டோன்மென்ட், பொன்மலை, கே.கே.நகா், ஸ்ரீரங்கம், காந்தி நகா், தில்லை நகா் ஆகிய 6 காவல் சரகங்களுக்கு தலா ஒரு வாகனமும், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிக்க ஒரு வாகனமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனத்தில் இரண்டு பெண் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சுழற்சி முறையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்த வாகனம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் ஜிபிஎஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதில், செய்தி பகிா்விற்கு வாக்கி-டாக்கி, சைரன் ஒலிப்பான், ஒளிரும் விளக்கு உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com