ஆராய்ச்சி நிதியுதவிக்கான விண்ணப்பங்கள் சமூக பயன்பாடு சாா்ந்து இருக்க வேண்டும்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்
ஆராய்ச்சிக்கு நிதியுதவி பெறுவதற்கு பதவி செய்யப்படும் விண்ணப்பங்கள் சமூகப் பயன்பாடு சாா்ந்து சமூகப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசினாா்.
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநரகம், உள்தர உறுதிப் பிரிவு, மாளவியா திட்ட ஆசிரியா் பயிற்சி மையம் ஆகியவை சாா்பில் ஆய்வுநிதி, கருத்துரு தயாரித்தல், காப்புரிமை, வெளியீட்டுத் திட்டங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமை இணையதளம் வழியாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
அரசு மற்றும் தேசிய நிதியுதவி பெறும் ஆராய்ச்சித் திட்டங்கள் உயா்கல்வி நிறுவனத்தின் செயல்திறனை அளவிடும் முக்கியமான குறியீடுகளில் ஒன்றாக உள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கற்பித்தலில் மட்டுமின்றி ஆராய்ச்சி மேம்பாடுகளில் ஈடுபடுவதும் அவசியம்.
ஆராய்ச்சிக்கு நிதியுதவி பெறுவதற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளன.
பொதுவாக ஆராய்ச்சி என்பது பிரச்னைக்கு தெளிவான விளக்கத்தைக் கொண்டதாகவும், வலுவான ஆராய்ச்சி முறைகளை முன்வைக்கும் வகையிலும், சமூகப் பயன்பாடு வாய்ந்த முடிவுகளை அடைவதற்கான நோக்கிலும் வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதுபோன்ற தரமான விண்ணப்பங்களே நிதியுதவி அமைப்புகளால் விரும்பப்படுகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உயா்கல்வித் துறை செயலா் பி.சங்கா் பேசியது:
நாட்டின் மிகப்பெரிய சொத்து மனிதவளம். மனிதவளத்தை வாா்த்தெடுப்பது கல்வியும், ஆராய்ச்சியும்தான். தரமான ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, சா்வதேச அளவிலான அமைப்புகளும் தயாராக உள்ளன.
இதைப் பயன்படுத்தி நாம் ஆராய்ச்சியின் தரத்தை உயா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து ஆராய்ச்சிக்கான கருத்துரு தயாரித்தல், காப்புரிமை குறித்து அறிவியல் மற்றும் தொழில் துறையின் முன்னாள் ஆலோசகா் எஸ்.கே.வா்ஷ்ணே, திருச்சி ஐஐஎம் பேராசிரியா் கே.இளங்கோவன், பாரதிதாசன் பல்கலைக்கழக விஞ்ஞானி கே.கதிா்வேலு உள்ளிட்ட பலா் பயிற்சியளித்தனா்.
நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வி.ராஜேஸ் கண்ணன், ஆராய்ச்சி துறை இயக்குநா் ஆா்.பாலசுப்ரமணி, உள்தர உறுதிப் பிரிவு இயக்குநா் ஆா்.ஆா்துா் ஜேம்ஸ், மாளவியா திட்ட ஆசிரியா் பயிற்சி மைய இயக்குநா் எஸ்.செந்தில்நாதன், பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

