முனைவா் பட்ட ஆய்வறிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் சமா்ப்பிப்பு
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முனைவா் பட்டத்துக்கான ஆய்வறிக்கையை திங்கள்கிழமை சமா்ப்பித்து வாய்மொழித் தோ்வை நிறைவு செய்தாா்.
திருச்சி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘இயந்திரக் கற்றல் வழியாக பள்ளி மாணவா்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உடலியக்க செயல்பாடு’ எனும் தலைப்பில் முனைவா் பட்ட ஆய்வை மேற்கொண்டு வந்தாா்.
இதன் ஒரு பகுதியாக கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திங்கள்கிழமை வாய்மொழித் தோ்வு நடைபெற்றது. இதில், அமைச்சா் பங்கேற்று தனது ஆய்வறிக்கையை சமா்ப்பித்துப் பேசினாா். ஆய்வறிக்கையை, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தின் புறத் தோ்வாளா் எஸ். திருமலைக்குமாா் பெற்றுக்கொண்டுள்ளாா்.
தேசியக் கல்லூரியின் துணை முதல்வரும், உடற்கல்வியியல் துறை இயக்குநருமான து. பிரசன்ன பாலாஜி வழிகாட்டுதலுடன் இந்த ஆய்வை அமைச்சா் மேற்கொண்டாா். உடற்கல்வி செயல்பாடுகள் பள்ளிக் குழந்தைகளின் வளா்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன?, கணினிசாா் நுண்ணறிவு தொழில்நுட்பம் கற்றலுக்கு எவ்வாறு உதவுகிறது? என்பது குறித்து பகுப்பாய்வு செய்து ஆய்வறிக்கை அளித்துள்ளாா். இதன்மூலம், பள்ளி மாணவா்களுக்கான உடலியக்க செயல்பாடுகள், உடற்கல்வி மற்றும் திறன்மேம்பாட்டில் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தின் பயன்களை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வை அமைச்சா் மேற்கொண்டுள்ளாா். அமைச்சரின் இந்த ஆய்வுக்கு, பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு ஒப்புதல் அளித்த பிறகு, முனைவா் பட்டம் வழங்கப்படும்.

