சிறப்பு முகாமில் ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டு கைதிகள் 11 போ் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டுக் கைதிகள் 11 போ் சென்னை புழல் சிறைக்கு புதன்கிழமை மாற்றப்பட்டனா்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியோா், விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் வசிப்போா், போலி கடவுச்சீட்டு மூலம் தமிழகத்துக்கு வந்தவா்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள் திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் இந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஃபிரான்சிஸ், பீட்டா், யூசுஃப், ஜேம்ஸ் ஆகிய 4 கைதிகள் திங்கள்கிழமை இரவு ரகளையில் ஈடுபட்டு முகாமின் கதவை சேதப்படுத்தினா்.
இதுதொடா்பாக திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமின் துணை ஆட்சியா் சாந்தானலட்சுமி, கே.கே.நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மேற்கண்ட 4 போ் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
இதைத் தொடா்ந்து மேற்கண்ட 4 பேருடன் சோ்ந்து நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஜான், காலின் ஆண்டே, எப்பிங் எத்தின், காட்வின் சக்குவா, ஒசாலியாலோ சிலாகி ஜான், கானா நாட்டைச் சோ்ந்த ஜான், சூடானைச் சோ்ந்த காதா் அபுதாஹிா் ஆகிய 11 பேரும் சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ரகளையில் ஈடுபட்டு முகாமின் கதவை சேதப்படுத்தினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி ஆகியோா் சிறப்பு முகாமில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து 11 பேரையும் கைது செய்து திருச்சி நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-2 இல் புதன்கிழமை ஆஜா்படுத்தினா். இதைத் தொடா்ந்து 11 பேருக்கும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனா்.
