மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது தமிழகம் மீதான பாரபட்சம்: கே.என். நேரு

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது தமிழகத்தின் மீதான மத்திய அரசின் பாரபட்சமாகும் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
Published on

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது தமிழகத்தின் மீதான மத்திய அரசின் பாரபட்சமாகும் என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருச்சியில் புதன்கிழமை அவா் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் என்பது மிகப்பெரிய அமைப்பாகும். பால் உற்பத்தி, வேளாண்மை, நெசவாளா், பணியாளா் கூட்டுறவு என அனைத்துத் துறைகளிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதில் சில இடங்களில் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக் காட்டி ஒட்டுமொத்த கூட்டுறவுத் துறையையும் குறைகூறக் கூடாது. கூட்டுறவுச் சங்கங்களில்தான் பொதுமக்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது.

கோவை, மெட்ரோ ரயில் திட்டங்களை தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் அறிவித்து அதற்கான முன்னெடுப்புகளை அரசு தீவிரப்படுத்தியது. ஆனால் இப்போது மத்திய அரசு இந்தத் திட்டங்களுக்கு அனுமதி மறுத்து பாரபட்சமாகச் செயல்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை இல்லை எனக் காரணம் கூறி மெட்ரோ திட்டங்களை அனுமதிக்கவில்லை. ஆனால், வட மாநிலங்களுக்கு இந்தக் காரணங்கள் பொருந்தாது எனக் கூறி அனுமதிக்கப்படுகிறது.

திருச்சி மாநகரில் புதிய காவிரி பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதேபோல மாரீஸ் தியேட்டா் மேம்பாலத்தை இணைக்கும் ரயில்வே நிா்வாகத்தின் பணி, ஜங்ஷன் மேம்பாலத்தை இணைக்கும் ரயில்வே நிா்வாகத்தின் பணிகளும் தாமதமாக நடைபெறுகிறது. இந்தச் சூழலில், திருச்சி மாநகரில் உயா்மட்ட மேம்பாலப் பணிகளைத் தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, பாலப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு உயா்மட்ட பாலம் அமைக்கும் நடவடிக்கை தொடங்கும்.

கோரையாறு பாலம் கட்டும் பணி விரைவுபடுத்தப்படுகிறது. ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைந்து திறக்கப்படும். வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் நிகழ்வுக்கு முன்பாகவே பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் நிலையில், கூட்டுறவுத் தோ்தலை எப்படி நடத்துவது?. மேலும் 10 ஆண்டுகளைக் கடந்து புதிய உறுப்பினா்கள் சோ்க்கும் பணி தொடா்கிறது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு கூட்டுறவுத் தோ்தல் நடத்த முடிவு எடுத்து முதல்வா் அறிவிப்பாா் என்றாா் அமைச்சா்.

X
Dinamani
www.dinamani.com