இரு மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது: கே.எம். காதா்மொகிதீன்
மதுரை, கோவை என இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மக்கள்தொகை 20 லட்சம் வரை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் தலா 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி கொடுக்க முடியாது என்று கூறி மத்திய பாஜக அரசு, தமிழகத்தின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், ஆக்ரா, போபால், தாணே போன்ற நகரங்களில் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தும்கூட அவை பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளன என்கிற ஒரே காரணத்தால் அங்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முழுமையான அனுமதி தரப்பட்டுள்ளது.
தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை பல மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட அனுமதியை மறுத்து இருப்பது தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.
பாஜக--வை தமிழக மக்கள் நிராகரித்து வருவதாலேயே கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது; தமிழக மக்களை பழிவாங்கும் போக்குடன் திட்டத்தை நிராகரித்திருப்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடுமையாக கண்டிக்கிறது.
இதுதொடா்பாக மதுரையில் திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை கண்டித்து வெள்ளிக்கிழமை நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வருடன் என்றும் துணை நிற்போம் என கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்துள்ளாா்.
