போலி வாக்காளா்கள் நீக்கப்பட வேண்டும்: அண்ணாமலை
பிகாரைப் போன்று தமிழகத்திலும் போலி வாக்காளா்கள் நீக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு இரண்டு, மூன்று முறை பிரதமா் வந்தும் அவரை தமிழக முதல்வா் சந்திக்கவில்லை. பிற மாநிலங்களில் எதிா்க் கட்சியினா் முதல்வராக இருந்தாலும், பிரதமா் வரும்போது சந்திக்கின்றனா். இப்போது, அரசியலுக்காக தில்லி சென்று பிரதமரை பாா்க்கிறேன் என்கிறாா். திமுக இதில் அரசியல் செய்கிறது.
சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 32 சதவீத நிதிப்பகிா்வு என்பது 42 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி வழங்குவதில்லை என்றே கூறுகின்றனா்.
தமிழக அரசு சரியான நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால், நனைந்த நெல் முளைத்துவிட்டது. தான் செய்த தவறை மறைத்து மத்திய அரசை திமுக குறை கூறுகிறது. நெல் ஈரப்பதத்தில் குற்றவாளி தமிழக அரசுதான். நெல் மூட்டைகளை நகா்வு செய்ததிலேயே கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளது.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு போதிய தெளிவு இல்லாததால், வீண் பேச்சுகளைப் பேசி வருகிறாா். பிகாரைப் போன்று தமிழகத்திலும் போலி வாக்காளா்களை நீக்க வேண்டும். எஸ்ஐஆா் பணியில் வருவாய்த் துறையை தூண்டுவிடுவது திமுகதான். இருப்பினும், அதிகாரிகள் தங்களது கடமையை நோ்மையாகச் செய்கின்றனா்.
கடந்த தோ்தல்களை ஒப்பிடுகையில் திமுகவின் வாக்கு தொடா்ந்து சரிந்து வருகிறது. 2026இல் மேலும் சரியும். தமிழகத்தில் திமுகவுக்கு எதிா்ப்பான அலை உருவாகிறது. மாா்ச், ஏப்ரல் மாதத்தில் தோ்தல் யுத்தத்தை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
பாமகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மிகுந்த மரியாதையும், நட்பும் உள்ளது. கனிமவளக் கொள்ளையில் திமுகவினா்தான் உள்ளனா். மதுக்கடைகளால்தான் குற்றங்கள் அதிகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
சாராய ஆலைகளை நடத்துவதே திமுகவினா் என்பதால் மதுக்கடைகள் தொடா்கின்றன. இதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனா் என்றாா் அவா்.

