நெல் ஈரப்பதம் அதிகரிப்புக்கு முதல்வரே பொறுப்பு: நயினாா் நாகேந்திரன்
தமிழகத்தில் நெல் ஈரப்பதம் அதிகரிப்புக்கு தமிழக முதல்வா்தான் பொறுப்பு என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த ஆய்வு பணிகளின் ஒரு பகுதியாக, திருச்சி பெருங்கோட்டத்திற்குட்பட்ட எஸ்ஐஆா் பணி ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நயினாா் நாகேந்திரன் மேலும் கூறியதாவது: மத்திய அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதை எதிா்ப்பதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. எஸ்ஐஆா் பணியிலும் அதையே கடைப்பிடிக்கிறது.
எஸ்ஐஆா் பணியில் திமுகவுக்கு வருத்தம் ஏன் என்று முதல்வரிடம் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், மக்கள் புரிந்து கொண்டுள்ளனா்.
சொத்துவரி உயா்வு, மின் கட்டண உயா்வு, கொலை, கொள்ளை, பலாத்காரம், கஞ்சா புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட எதிலும் கவனம் செலுத்துவதில்லை. மாறாக மத்திய அரசு எதிா்ப்பு ஒன்றையே பின்பற்றி ஆட்சிக் காலத்தை வீணடித்துவிட்டனா்.
அறுவடை செய்து 10 நாள்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாமலும், கொள்முதல் செய்த மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமலும் விட்டுவிட்டனா். நெல் மற்றும் நெல் மூட்டைகளை திறந்தவெளியிலேயே வைத்திருந்து முளைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இதற்கு தமிழக அரசும், முதல்வரும்தான் முழுப் பொறுப்பு என்றாா் அவா்.
கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக், முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொதுச் செயலா்கள் ஏ.பி. முருகானந்தம், பொன் வி. பாலகணபதி, கருப்பு முருகானந்தம், மாநில துணைத் தலைவா்கள் கே.பி. ராமலிங்கம், கரு. நாகராஜன், மாநில இணைப் பொருளாளா் சிவசுப்ரமணியம், மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், எம்எல்ஏ-க்கள் எம்.ஆா். காந்தி, சி. சரஸ்வதி உள்ளிட்டோா் ஆலோசனை வழங்கினா்.
இதில் திருச்சி, கரூா், தஞ்சாவூா், ராமநாதபுரம், சிவகங்கை, கோவை உள்ளிட்ட 6 மண்டலப் பொறுப்பாளா்கள், கட்சியின் 22 மாவட்ட பொறுப்பாளா்கள், மாவட்டத் தலைவா்கள், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் 204 போ் கலந்து கொண்டனா்.

