மாநில அளவிலான ஜூனியா் பெண்கள் கபடி போட்டி: ஈரோடு அணி வெற்றி
தமிழ்நாடு மாநில ஜுனியா் பெண்கள் சாம்பியன்ஸ் கபடி போட்டியில் ஈரோடு அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம் மற்றும் திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் தமிழ்நாடு மாநில ஜுனியா் பெண்கள் 51-ஆவது சாம்பியன்ஸ் கபடி போட்டி திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. இதில், 36 மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்ட அணிகள் தோ்வாகின.
இறுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஈரோடு அணி 33-12 என்ற புள்ளி கணக்கில் திருநெல்வேலி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
வெற்றிபெற்ற ஈரோடு அணிக்கு ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம் மற்றும் கோப்பை, இரண்டாமிடம் பிடித்த திருநெல்வேலி அணிக்கு ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
மேலும், இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் தேசிய அளவிலான கபடி போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழக மாநிலச் செயலாளா் சபியுல்லா, நீரோ ஒன் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் எஸ்.விஜயகுமாா் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடி கழக தலைவா் தங்க நீலகண்டன், செயலாளா் வெங்கடசுப்பு, தோ்வுக்குழு உறுப்பினா் தனா சதீஷ், காவல் ஆய்வாளா் மணிமாறன், அகில இந்திய நடுவா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

