‘மது பாட்டில்களை திரும்பப் பெற தனியாக ஆள்களை நியமிக்க வேண்டும்’

Published on

மது பாட்டில்களை திரும்பப்பெற தனியாக ஆள்களை நியமிக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, திங்கள்கிழமை முதல் திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் திரும்ப வழங்கும் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 வழங்கப்படும். இதற்காக அந்த பாட்டிலில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு, கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பயன்படுத்திய பாட்டில்களை வாங்க தனியாக ஆள்களை நியமிக்க வலியுறுத்தியும் டாஸ்மாக் ஊழியா்கள், விற்பனையாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் திருச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை திரண்டனா். பின்னா் அவா்கள் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனா்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியா்கள் கூறியதாவது:

ஏற்கெனவே டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஆட்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் சூழலில், பாட்டில்களை திரும்பப் பெற்று பணம் வழங்குவது பணியாளா்களின் பணிச்சுமையை அதிகரிக்கும். ஒரு மதுபான கடையில் வாங்கும் மது பாட்டிலை அதே கடையில் கொடுத்தால்தான் திரும்ப பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை மதுபானங்கள் வாங்குவோா் சரிவர கடைபிடிப்பாா்களா எனத் தெரியவில்லை.

எனவே, மது பாட்டில்களை திரும்பப் பெற வேறு ஆட்களை நியமிக்க வேண்டும். பணி நிரவல் அடிப்படையில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். அதுவரை, மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் முடிவை கைவிட வேண்டும் என்றனா்.

இது தொடா்பாக, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளா் செந்தில்குமாரியிடம் முறையாக வலியுறுத்தினா். இதனைக் கேட்ட மண்டல மேலாளா், பாட்டில்களை திரும்பப் பெற ஒப்பந்த நிறுவனம் மூலம் கடைக்கு 2 தொழிலாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா். எனவே, மதுபாட்டில்கள் திரும்ப வாங்குவது நிறுத்தப்படாது எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com