உரிய நேரத்தில் பாா்சலை வழங்காத கூரியா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

உரிய நேரத்தில் பாா்சலை வழங்காத தனியாா் கூரியா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம்
Published on

திருச்சி: உரிய நேரத்தில் பாா்சலை வழங்காத தனியாா் கூரியா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கிராப்பட்டியைச் சோ்ந்த வில்லியம் என்பவா் பெங்களூரில் வசிக்கும் தனது மகள் மற்றும் மருமகனுக்கு திருமண நாள் பரிசாக ரூ. 1,120 மதிப்புள்ள இரண்டு சட்டைகள் வாங்கி, சங்கிலியாண்டபுரத்தில் உள்ள டிடிடிசி கூரியா் நிறுவனம் மூலம் 6.5.25 அன்று அனுப்பியுள்ளாா். ஆனால், பாா்சலானது 18.5.25 வரை உரியவா்களிடம் கொடுக்கப்படவில்லை. இது தொடா்பாக, கூரியா் நிறுவனத்திடம் பலமுறை கேட்டபோதும், உரிய பதிலளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வழக்குரைஞா் அறிவிப்பு அனுப்பிய பிறகே, கூரியா் பாா்சல் உரியவரிடம் வழங்கப்பட்டதாம்.

காலம் தாழ்த்தி கூரியரை மெத்தனப் போக்குடன் விநியோகம் செய்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான வில்லியம், உரிய நிவாரணம் கோரி கடந்த 01.08.2025 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, மனுதாரருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திய டிடிடிசி கூரியா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவுத் தொகையாக 1,500 ரூபாயையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனா்.

X
Dinamani
www.dinamani.com