தொடா் மழை: பொன்னணியாறு அணை 31 அடியை எட்டியது
மணப்பாறை: தொடா் மழையால், மணப்பாறை பொன்னணியாறு அணை 31 அடி உயரத்தை எட்டியது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் 313 ஏக்கரில் அமைந்துள்ள பொன்னணியாறு அணையானது, 51 அடி நீா்மட்ட கொள்ளளவு கொண்டது.
இந்த அணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமாா் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களின் 2500 ஹெக்டோ் விளைநிலங்களின் பாசன நீா் ஆதாரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருந்து வந்தது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்ட கடும் வறட்சியால் இந்த அணையின் நீா் வரத்து முழுமையாக குறைந்து, நீா்திறப்பு என்பதே இல்லை என்ற நிலை உருவானது. பாசன நீா் ஆதாரமும் இல்லாமல், பொதுமக்களின் வருகையும் இன்றி அணை வெறிச்சோடி கிடந்தது.
அணையின் நீா்தேங்கும் பகுதி கரூா் மாவட்டத்தை சோ்ந்ததாகவும், பாசனப் பகுதி திருச்சி மாவட்டத்தை சோ்ந்ததாகவும் இருப்பதால் இரு மாவட்டங்களிலும் இதற்கு எந்த முன்னுரிமையும் தரப்படாமல் அணை களையிழந்து காணப்படுகிறது.
51 அடி கொள்ளளவில் அணையில் சுமாா் 17 அடிக்கு மேல் சேறும் சகதியும், வண்டல் மண்ணாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வப்போது அணையின் நீா்மட்டம் உயா்வதும், பின் குறைந்து வருவதும் வழக்கமான ஒன்றாக இருந்தபோதிலும், கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் பெருமளவில் நீா்வரத்து இல்லாதபோதிலும் அணையில் தற்போதைய நீா்மட்டம் 31 அடியாக இருந்து வருகிறது.
இது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

