சுமை வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் சுமை வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி அரியமங்கலம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் க.கமலதாசன் (45), சுமை வாகன ஓட்டுநா். இவா் அண்மையில் கடன் வாங்கி சுமை வாகனம் வாங்கியுள்ளாா். போதிய வருமானம் இல்லாததால் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளாா். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த அக்டோபா் 24-ஆம் தேதி ஏற்பட்ட தகராறு காரணமாக கமலதாசனின் மனைவி மகாலட்சுமி அவரது தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அதன்பின், கமலதாசன் தனது மனைவியிடம் கடந்த 25-ஆம் தேதி பேசியுள்ளாா்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (அக்.27) அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து, அக்கம்பக்கத்து வீட்டினா் மகாலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மகாலட்சுமி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது கமலதாசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
