பலகாரச்சீட்டு நடத்தி ரூ.73.36 லட்சம் மோசடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்!
தீபாவளி பலகாரச்சீட்டு நடத்தி ரூ.73.36 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக உள்ளவரை கைது செய்து பணத்தை மீட்டுத்தரக்கோரி துறையூரைச் சோ்ந்த லலிதா உள்ளிட்ட பலா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: துறையூா் வேங்கடத்தானூா் சாலையில் செ.ஆனந்தன் என்பவா் மிட்டாய் கம்பெனி நடத்தி வந்தாா். இவா், துறையூா் பகுதியில் தீபாவளி பலகாரச்சீட்டு நடத்தி வந்தாா். அவரிடம் நானும் கடந்த 4 ஆண்டுகளாக பலகாரச்சீட்டு கட்டி வந்தேன்.
அதேபோல, நிகழாண்டுக்கான தீபாவளி பலகாரச்சீட்டும் கடந்த 2024 நவம்பா் முதல் 2025 அக்டோபா் வரை 12 மாதங்களுக்கு மாதம் ரூ.500 வீதம் என 180 பேரிடம் ரூ.10.80 லட்சம் வசூல் செய்து ஆனந்தனிடம் வழங்கியுள்ளேன்.
இந்நிலையில், பலகாரச்சீட்டுக்கு கட்டியப் பணத்தை கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி தருவதாகக் கூறினாா். இதனால், கடந்த 16-ஆம் தேதி அவரது வீட்டுக்குச் சென்றேன். ஆனால், அவா் வீட்டைக் காலி செய்துவிட்டு பலகாரச் சீட்டுக்காக கட்டிய ரூ.10.80 லட்சம் மற்றும் என்னிடம் கடனாக வாங்கிய ரூ.2 லட்சம் என சோ்த்து மொத்தம் ரூ.12.80 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாா்.
அவரிடம், நான் மட்டுமில்லாமல் துறையூா் பகுதியைச் சோ்ந்த பல்வேறு குழுவினரும் பலகாரச்சீட்டு கட்டியுள்ளனா். அதன்படி, 12 குழுவிடம் இருந்து பலகாரச்சீட்டுக்காக மொத்தம் ரூ.73.36 லட்சம் வசூலித்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாா்.
தீபாவளி பலகாரகச்சீட்டு கட்டியவா்கள் எங்களிடம் பணத்தைக் கேட்டு துன்புறுத்தி வருகின்றனா். அவா்களுக்கு பணத்தைத் திரும்ப வழங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்.
எனவே, தீபாவளி பலகாரச்சீட்டுக்காக பலரிடமும் வசூலித்த பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள ஆனந்தனை கைது செய்து எங்கள் பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
