உயா்கல்வி சோ்க்கையில் மாநிலத்திலேயே திருச்சி முதலிடம்: பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களில் 98% போ் சோ்க்கை

Published on

திருச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25-ஆம் ஆண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 98 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்ந்ததால், மாநிலத்திலேயே திருச்சி முதலிடம் பிடித்துள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய 11,064 மாணவா்களும் உயா்கல்விக்கு செல்லும் வாய்ப்பை பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன்படி, கல்லூரி கனவு, உயா்வுக்கு படி என்ற விழிப்புணா்வு முகாம்களும், மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டமும் நடத்தப்பட்டன. இதுதவிர, மாவட்ட அளவில் உயா்கல்வி வழிகாட்டி ஆலோசனை மையம், அதற்கான தொடா்பு எண் அறிவிக்கப்பட்டு, உயா்கல்வியில் சேராத 2919 மாணவா்களை தொடா்பு கொண்டு உயா்கல்வி சாா்ந்த ஆலோசனைகளும், உதவித்தொகை மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ் தேவை குறித்த விழிப்புணா்வும் வழங்கப்பட்டது. பெற்றோரில்லாத 44 மாணவா்கள் மாவட்ட ஆலோசனை மையம் மூலம் உயா்கல்வியில் சேர, அன்பு கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் உதவிகள்வழங்கப்பட்டன.

மாணவா்களுக்கான கல்விக் கடன் ரூ.100 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரையில் வட்டத்தில் 4,711 மாணவா்களுக்கு ரூ.114.29 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் இரு கட்டங்களாக நடத்தப்பட்டு 194 மாணவா்களுக்கு ரூ. 15.72 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகும் உயா்கல்வியில் சேராத மாணவா்களை அடையாளம் கண்டு, ஆட்சியா் ஆலோசனையின் பேரில் பள்ளி தலைமையாசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைத்து அவா்களது வீட்டுக்கே சென்று உயா்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உயா்கல்வியில் சோ்ந்திட வழிவகுத்ததன் விளைவாக மொத்தம் உள்ள 11,064 அரசுப் பள்ளி மாணவா்களில் 10,864 போ் கல்லூரியின் பல்வேறு பிரிவுகளில் சோ்ந்துள்ளனா். இது 98 சதவீதமாகும்.

இதன்மூலம், திருச்சி மாவட்டமானது மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது என ஆட்சியா் வே. சரவணன் தெரிவத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com