முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி: சிலைக்கு கட்சியினா் மரியாதை
முத்துராமலிங்கத் தேவரின் 63-ஆவது குருபூஜை மற்றும் 118-ஆவது ஜெயந்தியையொட்டி திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தேவா் சிலைக்கு திமுக சாா்பில், திருச்சி தெற்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், மாநகரச் செயலாளா் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா் சேகரன், மாவட்ட நிா்வாகிகள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மத்திய மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட செயலா் க. வைரமணி, மேயா் மு. அன்பழகன் ஆகியோரது தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக: அதிமுக சாா்பில், மாநகா் மாவட்ட செயலரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில், அவைத் தலைவா் ஐயப்பன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் மரியாதை செலுத்தினா்.
திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், கட்சி அலுவலகத்தில் தேவா் உருவப்படத்துக்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், அமைப்புச் செயலா் ஆா். மனோகரன், முன்னாள் அமைச்சா் எஸ். வளா்மதி, முன்னாள் எம்எல்ஏ இந்திராகாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருச்சி புகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்பியும், மாவட்ட செயலருமான ப.குமாா் தலைமையில் தேவா் உருவப்படம் திறக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, காங்கிரஸ், பாஜக, அமமுக, தேமுதிக, மதிமுக, தமாகா, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி, மூவேந்தா் முன்னணி, மூவேந்தா் முன்னேற்றக் கழகம், நாம் தமிழா் கட்சி, அண்ணா திராவிடா் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் அறக்கட்டளை, தேவா் பேரவை, முக்குலத்தோா் பேரவை, கள்ளா் பேரவை, நேதாஜி சிலம்பாட்ட பாசறை, முக்குலத்தோா் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளின் சாா்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையொட்டி, சிலையின் அருகேயும், பேருந்து நிலையப் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேவா் உருவப்படம் அலங்கரித்து வைத்தும், சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. முளைப்பாரி எடுத்து வந்தும், பால்குட ஊா்வலமாக வந்தும் பலா் மரியாதை செலுத்தினா்.

