எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது தேவையில்லாதது
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆா்.) விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது தேவையில்லாதது என்றாா் பாஜக மேலிட இணை பொறுப்பாளா் பி. சுதாகா் ரெட்டி.
இது குறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிகாா் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்கள் தொடா்ந்து தாக்கப்படுவதாக பேசியதற்கு, தமிழக முதல்வரின் விமா்சனம் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிகாரைச் சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தாக்கப்பட்டது குறித்தே பிரதமா், தோ்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தாா்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டிருப்பதையும், ஊழல் மற்றும் முறைகேடுகளில் திமுக ஈடுபட்டிருப்பதை மறைப்பதற்கும், அவற்றை திசைதிருப்புவதற்கும் தமிழக முதல்வரும், அவருடைய மகன் துணை முதல்வரும் ஈடுபட்டு வருகின்றனா். இதை தமிழக மக்கள் ஏற்கமாட்டாா்கள்.
போலி வாக்காளா்களை நீக்கி, உண்மையான வாக்காளா்களின் வாக்குரிமையை நிலைநாட்டவே எஸ்.ஐ.ஆா் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வா் கூட்டுவது தேவையற்ற ஒன்று என்றாா் சுதாகா் ரெட்டி.
