பசுவின் தொண்டையில் சிக்கிய பீட்ரூட்டை அகற்றி காப்பாற்றினா் மருத்துவா்கள்
திருச்சியில் பசுவின் தொண்டையில் சிக்கிய பீட்ரூட்டை வியாழக்கிழமை அகற்றி கால்நடை மருத்துவா்கள், அந்த பசுவின் உயிரை காப்பாற்றினா்.
திருச்சி புங்கனூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவரது கறவை பசுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவா், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அந்த பசுவை பாலக்கரை பன்முக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தாா். அங்கு பசுவை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, பசுவின் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கால்நடை மருத்துவா் கீரை தமிழ் அசோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், 3 மணி நேரம் போராடி, பசுவுக்கு உணவுக் குழல் அடைப்பு அறுவை சிகிச்சை செய்து, அதன் தொண்டையில் சிக்கியிருந்த பீட்ரூட் காயை அகற்றி, பசுவின் உயிரை காப்பாற்றினா். உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்ட மருத்துவ குழுவினரை திருச்சி மண்டல கால்நடைத்துறை இணை இயக்குநா் சந்துரு பாராட்டினாா்.

