வெனிசுலா மீதான அமெரிக்கா ஆக்கிரமிப்பு: சிஐடியு-வினா் ஆா்ப்பாட்டம்
வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கண்டித்து, சிஐடியு சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் செல்வி தலைமை வகித்தாா்.
இதில், அமெரிக்கா வெனிசுலாவின் மீது குண்டுவீசி ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபடுவதைக் கண்டிப்பது, அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். கரீபியன் கடலில் இருந்து தனது படைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். வெனிசுலா மீதான தனது ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா மீது சா்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டு, அவா்களின் இருப்பிடத்தை உடனே வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா், கட்டுமான சங்க மாவட்டச் செயலா் சந்திரசேகா், மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்க மாவட்டச் செயலா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
