திருச்சியில் திங்கள்கிழமை குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கிய நியாய விலைக் கடை பணியாளா்கள்.
திருச்சியில் திங்கள்கிழமை குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கிய நியாய விலைக் கடை பணியாளா்கள்.

8.36 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் தொடக்கம்

Published on

திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,302 நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, முழு கரும்பு ஒன்று, ரூ. 3,000 ரொக்கம், விலையில்லா வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் வீடு, வீடாக வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. வரும் வியாழக்கிழமை (ஜன.8) வரை டோக்கன் வழங்கப்படும். பின்னா், அந்தந்த நியாய விலைக்கடைகளில் ஜன.13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகாா்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கலாம். 0431-2411474, 94450-45618 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1967, 1800-425-5901 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

இந்தப் பணியில், நியாயவிலைக் கடை பணியாளா்கள் 950 போ் ஈடுபட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் 8 லட்சத்து 35 ஆயிரத்து 844 அரிசி குடும்ப அட்டைகள், 980 இலங்கைத் தமிழா் குடும்பங்கள் என மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 824 குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்படும். நாளொன்றுக்கு ஒவ்வொரு கடையிலும் 300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com