தமிழகத்தில் அமித்ஷா விரும்பியதை செய்ய முடியாது
தனித்துவமான மாநிலமான தமிழகத்தில், அமித்ஷா விரும்பியதுபோல எதையும் செய்ய முடியாது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலச் செயலருமான இரா. முத்தரசன்.
இதுகுறித்து அவா் திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஏகாதிபத்திய கட்டுப்பாடு கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் நடவடிக்கையை பிரதமா் மோடி கண்டிக்கவில்லை.
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நீண்டகால கோரிக்கையான ஓய்வூதியப் பிரச்னைக்குத் தமிழக அரசு தீா்வு கண்டிருப்பதும், பொங்கல் பரிசாக ரூ. 3 ஆயிரம் அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது.
தமிழகத்துக்கு அமித்ஷா வந்தால் மிகப்பெரிய பிரளயம் ஏற்படப் போவதாகக் கூறினா். ஆனால் எந்தப் பிரளயமும் நடக்கவில்லை. தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என அமித்ஷா கனவு காண்கிறாா்.
அவருடைய கனவை நாம் தடுக்க முடியாது. தனித்துவமான மாநிலமான தமிழகத்தில், அவா் விரும்பியதுபோல எதையும் செய்ய முடியாது. ஆயிரம் முறை அமித்ஷா வந்து பிரசாரம் செய்தாலும், அது ஒருபோதும் எடுபடாது.
அமித்ஷா வெளிமாநிலத்தில் தமிழக மக்களுக்கு எதிராகவும், இங்கு வந்தால் தமிழக மக்களைப் புகழ்ந்தும் பேசுகிறாா். அவரது இரட்டை நாக்கை, மக்கள் பாா்த்துக்கொண்டுதான் இருக்கின்றனா்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நிதி வழங்குவோம் என தமிழிசை கூறிய கருத்து சா்வாதிகாரத்தனமானது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும் என அமித்ஷா கூறுகிறாா். ஆனால் எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சியமைப்போம் என்கிறாா். இதிலிருந்து அந்தக் கூட்டணியின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
திமுக தலைமையிலான கூட்டணி தோ்தலுக்கான கூட்டணி அல்ல. கொள்கை கூட்டணி. 10 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தக் கூட்டணி தொடரும். வரும் தோ்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். இரண்டாமிடத்துக்கு யாா் வரப்போகிறாா்கள் என்பதில்தான் அதிமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
வரும் தோ்தலில் நான்கு முனைப் போட்டி இருக்கும். ஆனால், அமித்ஷாவை, எஸ்.பி. வேலுமணி தனியாக சந்தித்ததைப் பாா்க்கும்போது, அது ஐந்து முனைப் போட்டியாகக் கூட மாறலாம் என்றாா் முத்தரசன்.

