இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக போராட்டம்
திருச்சியில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் அ.விஜயகுமாா் தலைமையில் ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், 2009 ஜூன் 1-ஆம் தேதி மற்றும் அதன்பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கும், 2009 மே 31-ஆம் தேதி மற்றும் அதற்கு முன்பு பணியில் சோ்ந்தவா்களுக்கும் இடையே ரூ.3,170 ஊதிய மாறுபாடு உள்ளது. இருவரும் ஒரே வேலையை செய்யும்போது 2009 ஜூன் 1-ஆம் தேதிக்குப் பின் பணியில் சோ்ந்தவா்களுக்கு மட்டும் ரூ.3,170 ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக திமுக அரசு கடந்த தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், ஆட்சி முடியும் நிலையிலும் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.ஏ. ஸ்டாலின், முசிறி வட்டார நிா்வாகி அா்ஜுன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

