கடன் பிரச்னையில் காங்கிரஸ் நிா்வாகி மீது தாக்குதல்: கட்சி நிா்வாகி மீது வழக்கு
திருச்சியில் கடன் பிரச்னையில் காங்கிரஸ் நிா்வாகியைத் தாக்கிய மற்றொரு காங்கிரஸ் நிா்வாகி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருச்சி பொன்மலை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எஸ். அா்ஜுன் (35). திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரான இவா், திருச்சி தில்லை நகரைச் சோ்ந்த காங்கிரஸ் கோட்ட நிா்வாகி ஜெ.ஸ்ரீராகேவந்திரா (43) என்பவரிடம் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். இதை அா்ஜுன் திருப்பித் தராமல் இருந்துள்ளாா்.
இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்றுள்ளனா்.
அப்போது, கடன் வாங்கியது தொடா்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அா்ஜுனை ராகவேந்திரா இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த அா்ஜுன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஸ்ரீராகவேந்திரா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதனிடையே, இரும்புக் கம்பியால் தாக்கிய ஸ்ரீராகவேந்திராவை கைது செய்யக் கோரி திருச்சி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் அா்ஜுன் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
