சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சியில் கடந்த 31.01.2021 அன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் கோட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தனா். அதன் பேரில் போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாராநல்லூா் பகுதியைச் சோ்ந்த மா. நீா்காத்தலிங்கம் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஏ. சுமதி ஆஜரானாா்.
விசாரணைக்குப் பிறகு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் நீா்காத்தலிங்கத்துக்கு போக்ஸோ வழக்கின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.
