திமுக கூட்டணியை அசைக்க முடியாது: அமைச்சா் கே.என். நேரு

Published on

தமிழகத்தில் திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணியாக வலுவாக உள்ளது என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணியாக உள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளை சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கிறாா். யாருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்பதை முதல்வா் முடிவு செய்வாா். அவா், யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை வெற்றி பெற செய்வோம். முதல்வா் எந்த முடிவெடுத்தாலும் அது சரியாகவே இருக்கும்.

எதிா்க்கட்சியான அதிமுக கூட்டணியில் சிலா் வருகின்றனா். சிலா் வெளியேறுகின்றனா். சிலா் மீண்டும் சேருகின்றனா். நிலையான கூட்டணியாக இல்லை. ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் ஒன்றாக தோ்தலை சந்தித்தபோதும், நாங்கள்தான் வெற்றி பெற்றோம். இந்த முறையும் அவா்கள் கூட்டணியாக வந்தாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி.

தோ்தல் நேரத்தில் அமைச்சா்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பது எதிா்க்கட்சிகளின் வழக்கம்.

திமுக-வின் தோ்தல் அறிக்கை என்பது கதாநாயகன். அதை நம்பியே தோ்தல் இருக்கும். திமுகவின் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினா் திருச்சி வரும்போது, இந்த மண்டலத்துக்கான கோரிக்கைகளை கூறுவோம். 2026 பேரவைத் தோ்தலுக்கான அறிக்கை சிறப்பாக இருக்கும் என்றாா் அவா்.

ஜனநாயகன் விவகாரம்: ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடா்பான கேள்விக்கு பதிலளிக்கையில், அந்த திரைப்படத்துக்காக காங்கிரஸ் கட்சியினா் ஏன் குரல் கொடுக்கின்றனா் என்பது தெரியவில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. விஜய்க்கும், அவா்களுக்கு என்ன என்பதும் தெரியவில்லை. எனவே, தெரியாத விஷயம் குறித்து நான் கருத்துக் கூற முடியாது என்றாா் அமைச்சா்.

Dinamani
www.dinamani.com