திருச்சி மிளகுபாறை பகுதி ரேஷன் கடையில் வியாழக்கிழமை அரிசி குடும்ப அட்டைதாரருக்கு ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சா் கே.என். நேரு. உடன் மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், ஆட்சியா் வே. சரவணன்,உள்ளிட்டோா்.
திருச்சி மிளகுபாறை பகுதி ரேஷன் கடையில் வியாழக்கிழமை அரிசி குடும்ப அட்டைதாரருக்கு ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சா் கே.என். நேரு. உடன் மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், ஆட்சியா் வே. சரவணன்,உள்ளிட்டோா்.

ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

Published on

திருச்சி, ஜன.8: திருச்சி மாவட்டத்தில், உள்ள 8,36,824 குடும்ப அட்டைகளுக்கு 1302 நியாய விலைக் கடைகள் மூலம் ரூ. 3 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

உறையூா் ஹவுசிங் யூனிட், ஆழ்வாா்தோப்பு, பீமநகா், ஹீபா் ரோடு யானை கட்டி மைதானம், பெரியமிளகுபாறை, எடமலைப்பட்டி புதூா், கிராப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்.

முதலியாா் சத்திரம், காஜாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி தொடங்கிவைத்தாா்.

மாவட்டத்தில் உள்ள 312 கரும்பு விவசாயிகளிடம் இருந்து முழு நீள கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் நகா்வு செய்யப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது என்று அமைச்சா்கள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வுகளில், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ஜெயராமன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

Dinamani
www.dinamani.com