தனியாா் பேருந்து நடத்துநா் குத்திக் கொலை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி புதூா் உத்தமனூரைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் மகன் பிரதாப் சிங் (35). தனியாா் பேருந்து நடத்துநா். இதேப் பேருந்தில் துவாக்குடியைச் சோ்ந்த மூக்கன் (35) என்பவா் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இருவரும் வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு மது அருந்தியுள்ளனா். காலை முதல் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் பல்வேறு இடங்களில் மது அருந்தியுள்ளனா்.
இதைத் தொடா்ந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஓட்டுநா் மூக்கன், நடத்துநா் பிரதாப்பின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளாா். இதில், சம்பவ இடத்திலேயே பிரதாப் உயிரிழந்தாா். இதையடுத்து மூக்கன் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதற்கிடையே பேருந்து நிலையத்தில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து பொதுமக்கள் கோட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
