வாா்டரை தாக்கிய மத்திய சிறை கைதி மீது வழக்கு
திருச்சி மத்திய சிறையில் வாா்டரை தாக்கிய ஆயுள் தண்டனை கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் வெ. ராஜ்குமாா் (26). திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘போக்ஸோ’ வழக்கில், ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2019 செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறை வாா்டா் கவியரசன் கடந்த சனிக்கிழமை சிறையில் ஆய்வு செய்தாா். அப்போது, ராஜ்குமாா் சிறையின் முன்பகுதியில் அமா்ந்து உணவருந்தியுள்ளாா். இதனால், அவரை உள்ளே சென்று உணவருந்துமாறு வாா்டா் கவியரசன் தெரிவித்துள்ளாா்.
அப்போது, ஜெயில் வாா்டா் கவியரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜ்குமாா், வாா்டரின் சட்டையைப் பிடித்து தள்ளியுள்ளாாா். மேலும், அவரை கையால் தாக்கியுள்ளாா். இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மத்திய சிறை அதிகாரி வெங்டசுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ராஜ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
