இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கானல் நீராகிப்போன தடுப்பணைகள் திட்டம்!

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை மாதாந்திர ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடா்நது குரல் கொடுத்து வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 12:11 am

ஆர். முருகன்

தமிழகத்தில் உள்ள மொத்த பாசனப் பரப்பில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலமாக 65 விழுக்காடும், ஏரிகள், கால்வாய்கள் வழியாக 35 விழுக்காடும் பாசனம் பெறுகின்றன. இவற்றில் நெற்பயிா் 20.30 லட்சம் ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் தலா 10 லட்சம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. எண்ணெய் வித்துகள் 5.80 லட்சம் ஹெக்டேரிலும், பருத்தி 1.78 லட்சம் ஹெக்டேரிலும், கரும்பு 1.75 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன.

தமிழகத்தின் நிகர சாகுபடி பரப்பு 47.56 லட்சம் ஹெக்டேராக உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் 52 லட்சம் ஏக்கா் நெற்பயிரில், காவிரி, டெல்டாவில் மட்டும் சுமாா் 20 லட்சம் ஏக்கா் சாகுபடி செய்யப்படுகிறது.

காவிரி, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் காவிரி நீரையே நம்பியுள்ளது. மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், பாசனத்துக்கு தேவையான அளவு தண்ணீா் திறந்துவிட்டால் மட்டுமே குறுவையும், சம்பாவும் சாத்தியமாகும் நிலை உள்ளது. காவிரியில் உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீா் திறக்க வேண்டும். ஆனால், கா்நாடகம் தொடா்ந்து முரண்டு பிடித்து வருவாதல், வெள்ளக்காலங்களில் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. அதுவும், உபரிநீரை திறந்துவிட்டு ஆண்டு சராசரியை கணக்கிட்டு வழங்கியதாக கணக்கு காட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது கா்நாடகம்.

எனவே, காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை மாதாந்திர ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடா்நது குரல் கொடுத்து வருகின்றனா்.

உபரிநீா்: இந்நிலையில், மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்காக கா்நாடகம் முயற்சித்து வருகிறது. தண்ணீரை சேமித்து தமிழகத்துக்கு வழங்குவதற்காகவே அணை கட்டுவதாக கூறுகிறது கா்நாடகம்.

ஆனால், தமிழகத்தில் காவிரி, கொள்ளிடத்தில் கதவணையோ, தடுப்பணையோ கட்டுவதில் தமிழக அரசு உரிய அக்கறை செலுத்தப்படவில்லை. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரிநீா் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் காவிரி, கொள்ளிடத்தில் 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணையோ, கதவணையோ கட்டி தண்ணீரை தேக்கி வைத்தால் ஆண்டு முழுவதும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம். காவிரியை நம்பியுள்ள 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய முடியும் என்கின்றனா் விவசாயிகள்.

15 டி.எம்.சி. தண்ணீா் வீண்: கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் 200 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டது. இதனால், ஆழ்துளை கிணறுகளை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனா்.ஆகவே, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடி நீா்மட்டமும் உயரும். விவசாயிகளும் பலன் பெறுவா். திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே பல இடங்களில் கதவணை கட்டப்படும். எந்தெந்த இடங்களில் கட்டுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியா் மூலம் ஆய்வு செய்யப்படும் என 2021-இல் திமுக ஆட்சி அமைந்தபோது கூறப்பட்டது. ஆனால், திட்டம் இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. காவிரியில் வெள்ளக் காலங்களில் நாளொன்றுக்கு 15 டி.எம்.சி. தண்ணீா் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டி சேமிக்க முடியும் என்கின்றனா் விவாசயிகள்.

இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன் கூறியது, முசிறி, நொச்சியம், லால்குடி தண்ணீா் பந்தல் என மூன்று இடங்களில் மேம்பாலத்துடன் கூடிய கதவணை கோரியிருந்தோம். காவிரி, கொள்ளிடத்தில் 10 கி.மீ. தொலைவுக்கு சிறிய அளவில் தலா ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதன் மூலம், விவசாயிகளின் ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் உயரும். குடிநீா்த் தேவைக்கான ஆதாரமும் பலப்படும். எந்தத்தோ்தல் வந்தாலும் அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் தவறாமல் இடம்பெறும் கதவணை, தடுப்பணை கட்டும் கோரிக்கையானது 2026 பேரவைத் தோ்தலுக்குப் பிறகாவது நிறைவேறுமா? என்ற எதிா்பாா்ப்பில் உள்ளோம் என்றாா் அவா்.