தேர்தல் புறக்கணிப்பு தகராறு: இளைஞர் மீது வழக்கு பதிவு
By DIN | Published On : 01st April 2019 09:04 AM | Last Updated : 01st April 2019 09:04 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை தகாத வார்த்தையால் திட்டிய இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்தை உடனே தொடங்கவேண்டும். இல்லையெனில், நிலத்தை விவசாயிகளுக்கே ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து மேலூர் கிராம மக்கள் தங்களது வீடுகளில் அண்மையில் கருப்பு க்கொடி கட்டி எதிர்ப்பைப் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேலூர் மக்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
இதனால் வேட்பாளர்கள் வாக்குசேகரிக்க அப்பகுதிக்குச் செல்லாத நிலையில், கடந்த 28 ஆம் தேதி வேட்பாளரை ஊருக்குள் வரவைப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசனுக்கும் (62), ராமதாஸ் (32) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமதாஸ் , கணேசனை தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. கணேசன் அளித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் ராமதாஸ் மீது சனிக்கிழமை இரவு வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.