உழைக்கும் அடித்தட்டு மக்களை சிந்திக்காதவர் மோடி
By DIN | Published On : 11th April 2019 08:27 AM | Last Updated : 11th April 2019 08:27 AM | அ+அ அ- |

உழைக்கும் அடித்தட்டு மக்களைப் பற்றி சிந்திக்காதவர் பிரதமர் மோடி என்றார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவஜோதியை ஆதரித்து புதன்கிழமை அரியலூரில் பிரசாரம் செய்த அவர் மேலும் பேசியது:
எல்லோரும் சொல்கிறார்கள் ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம் என்று. ஆனால், அவர்களோடுதான் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளன.
இவர்களை ஒழித்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும்.
அனைத்து உயிர்களுக்கும் தேவையான செயல்களைச் செய்வதே அரசியல் ஆகும். இதனால்தான் மக்களை நம்பி நாங்கள் தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறோம். திமுக, அதிமுக வைத்துள்ளது கூட்டணி அல்ல. நோட்டு மற்றும் சீட்டு அணி.
ஆளும் கட்சிகள் அறிவை வளர்க்கும் கல்வியை அனைவருக்கும் சமமாகத் தந்திருக்க வேண்டும். ஆனால் இங்குப் பணம் இருப்பவர்களுக்குத்தான் கல்வி கிடைக்கிறது.
அரசு மருத்துவமனைகள் ஏன் தரமாக இல்லை என்றால், ஆட்சியாளர்கள் தரமற்று இருப்பதால். தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும்போது அரசுப் பேருந்துகள் ஏன் லாபத்தில் இயங்கவில்லை?.
ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் தருவேன் எனக் கூறும் மோடி முன்பே கொடுத்திருக்கலாம். நாங்கள் வந்தால் 2 கோடி பேருக்கு வேலை எனக் கூறும் மோடி, ஆட்சியில் இருந்த போது ஏன் தரவில்லை?
உழைக்கும் அடித்தட்டு மக்களைப் பற்றி சிந்திக்காத அரசு மோடி அரசு. 50 கி.மீட்டருக்கு ரூ. 50 கப்பம் கட்டுகிறோம். இந்தியா அடிமையாக இருந்தபோதுகூட அதுபோலக் கட்டவில்லை.
காசுக்கு வாக்கை விற்கவில்லை. வாழ்க்கையை விற்கிறோம். ஒரு முறை எங்களுக்கு வாக்களித்துப் பாருங்கள்; செய்கிறோம். உலகம் முழுவதும் ஒரே கொள்கை உள்ள கட்சி நாம் தமிழர் கட்சி. 2 தொகுதிகளில் நிற்கும் ராகுல்காந்தி வென்ற பிறகு எந்தத் தொகுதியை ராஜிநாமா செய்வார்?
அந்தத் தொகுதி மறு தேர்தலுக்கான செலவு யாருடையது. மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் ஒருவர் தலைவரா? ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்பவரே தலைவர்.
வாக்குப் பெட்டியில் எது மங்கலாக உள்ள சின்னமோ அதுதான் விவசாயி சின்னம். தற்போது சின்னத்தையே மறைக்கிறார்கள் என்றார் சீமான்.