சாதி, மதத்தை சொல்லி வாக்கு கேட்போரை புறக்கணிக்க வேண்டும்: டிடிவி. தினகரன்

சாதி,  மதத்தை சொல்லி யார் வந்து வாக்கு கேட்டாலும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்
Updated on
1 min read

சாதி,  மதத்தை சொல்லி யார் வந்து வாக்கு கேட்டாலும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலர் டிடிவி. தினகரன் .
சிதம்பரம்  மக்களவைத்  தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆ. இளவரசனை ஆதரித்து  அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டத்தில் அவர் வியாழக்கிழமை பேசியது: திமுக தலைவர் ஸ்டாலின் சாதியையும் மதத்தையும் தனது பிரசாரத்தில் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்.  ஜாதி,  மதம் பற்றி யார் பேசிக் கொண்டு  ஓட்டு கேட்டாலும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
மோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் இது. 
நாட்டில் ஜிஎஸ்டியால் வேலைவாய்ப்பை இழந்து 6 லட்சம் பேர் உள்ளனர். பண மதிப்பிழப்பு கொள்கையால் கருப்புப் பணம் மீட்கப்பட்டதா? 
விவசாயிகள், நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.தமிழ்நாட்டில் சாதி,  மதம் இல்லாத ஓர் இயக்கம் அமமுகதான். தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாக உள்ளதால் அம்மாவின் கட்சியை அமமுகவால் மட்டுமே கொடுக்க முடியும்.
80 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நம்முடன் உள்ளனர். மக்களை ஏமாற்றி வரும் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும்.  நடைபெறவுள்ள மினி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஆளுங்கட்சி வெற்றி பெறாது. இதனால்,  தற்போதுள்ள ஆட்சியை மோடி காப்பாற்ற முடியாது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜயங்கொண்டம் பகுதியில் முந்திரித் தொழிற்சாலை,  அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். வறட்சியால் முந்திரி பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைத்துத் தரப்படும்.  அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை பெற்றுத் தரப்படும்.
பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
அரியலூர் மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத சுண்ணாம்பு சுரங்கங்களை மூடி பசுமை காடுகள் வளர்க்கப்படும். கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும்,  மக்கள் விரோத  மோடி அரசையும்,  எடப்பாடி அரசையும் அகற்ற பரிசு பெட்டிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com