ஏரியை தூர்வாரக் கோரி நூதன முறையில் மனு
By DIN | Published On : 26th April 2019 05:20 AM | Last Updated : 26th April 2019 05:20 AM | அ+அ அ- |

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள பழமை வாய்ந்த சுக்கிரன் ஏரியைத் தூர்வார கோரி விவசாயிகள் ஏரியிடமே வியாழக்கிழமை மனு அளித்தனர்.
திருமானூர் அருகேயுள்ள கோவிலூர், காமரசவல்லி வருவாய் எல்லையில் அமைந்துள்ளது சுக்கிரன் ஏரி. பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஏரி, புள்ளம்பாடி வாய்க்காலின் கடைசி பெரிய நீர்பிடிப்பு ஏரியாகும்.
சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன.
சோழ மன்னர்களால் வெட்டபட்ட இந்த ஏரியை இதுநாள் வரை தூர்வாரப்படவில்லை. இந்த ஏரியை முழுமையாகத் தூர்வாரினால் இப்பகுதியில் முப்போகமும் விவசாயம் நடைபெறுவதோடு, இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, கோடைகாலத்தைப் பயன்படுத்தி, இந்த ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற வகையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் சுக்கிரன் ஏரியில் சிறப்பு பூஜை செய்து, ஏரியிடமே கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதில்,விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.