காசோலை திரும்பியதாக பணம் பிடிப்பு: பெண் புகார்
By DIN | Published On : 26th April 2019 03:18 AM | Last Updated : 26th April 2019 03:18 AM | அ+அ அ- |

அரியலூர் அருகே காசோலை புத்தகம் கைக்கு கிடைக்காத நிலையில், காசோலை திரும்பியதாக (பவுன்ஸ்) கூறி பணம் பிடிக்கப்பட்டது குறித்து பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி கனிமொழி(40). இவர் தனது தந்தை தியாகராஜன் வீட்டில் வசிக்கிறார். கடந்த 4 ஆம் தேதி விளாங்குடியிலுள்ள ஒரு தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ள இவருக்கு ஏடிஎம் கார்டு மட்டும் வந்துள்ளது, காசோலை புத்தகம் வரவில்லை. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் அவர் கேட்டபோது, அஞ்சல் மூலம் வரும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காசோலை பவுன்ஸ் ஆனதாகவும்,அதற்கு சேமிப்புக் கணிக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கனிமொழிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கனிமொழி வங்கி மேலாளரை சந்தித்து கேட்டுள்ளார்.
அப்போது வங்கி கிளை மேலாளர் உங்களுக்கு காசோலை புத்தகம் அனுப்பட்டுள்ளது. அது அரியலூர் தலைமை அஞ்சல் நிலையம் வரை சென்றுள்ளது. அதன்பிறகு யாரிடம் சென்றுள்ளது எனத் தெரியவில்லை என்றிருக்கிறார். புகாரின் பேரில் கயர்லாபாத் போலீஸார் விசாரிக்கின்றனர்.