33 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
By DIN | Published On : 15th July 2019 08:59 AM | Last Updated : 15th July 2019 08:59 AM | அ+அ அ- |

அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 76 ஆயிரத்து 660 மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் கலந்து பேசியது:
ஆண்டிமடத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறகாளிகளுக்கு நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்தின் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர், 21 நபர்களுக்கு ரூ.15 லட்சத்து 64 ஆயிரத்து 500 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 10 பேருக்கு ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 960 மதிப்பில் திருமண உதவித்தொகை மற்றும் தங்க நாணயங்கள், 2 பேருக்கு ரூ.2,200 மதிப்பில் பிரெய்லி கைக்கடிகாரம் என மொத்தம் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 76 ஆயிரத்து 660 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ.ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். அரியலூர் கோட்டாட்சியர் நா.சத்தியநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, முடநீக்கியல் வல்லுநர் ராமன் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.