அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் மின் கம்பிகள் தொய்வாக இருந்தால் அருகேயுள்ள மின் வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
இதுகுறித்து ஜயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதால், மின் விபத்துக்களையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க பொதுமக்கள்
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மின் கம்பிகள் தொய்வாக இருந்தாலோ, மின் பாதையில் மரக்கிளைகள் உரசுவதுபோல் இருந்தாலோ உடனடியாக அருகே உள்ள மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
பாதையில், மின்கம்பி அறுந்து கிடந்தால் பொதுமக்கள் அதனைத் தொட வேண்டாம். உடனடியாக அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும்போது அருகே மின்பாதை கம்பிகள் சென்று கொண்டிருந்தால் அதனருகில் செல்லாமலும் மின்பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும்.