ராஜராஜ சோழன் குறித்த ரஞ்சித் கருத்து ஏற்புடையதல்ல: ஜி.கே வாசன்
By DIN | Published On : 14th June 2019 09:12 AM | Last Updated : 14th June 2019 09:12 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் பேரரசர் ராஜராஜ சோழனைப் பற்றி திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அவதூறாகப் பேசியது ஏற்புடையது அல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்த ஜி.கே.வாசன் அளித்த பேட்டி:
நீண்ட நாள் கோரிக்கையான பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி விட்டு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணம் மழை பொய்த்துவிட்டது. அதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசைப் பொறுத்தவரையில், பல பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடிய உயர்ந்த நிலையை சிறந்த முறையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இருப்பினும் போர்க்கால அடிப்படையில் இந்த பணி அவர்கள் உடனடியாக செய்யவேண்டும்.
திரைப்பட இயக்குநர் ரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாகப் பேசியது ஏற்புடையது அல்ல. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்களிடம் பொய்யான தகவலை திமுக-காங்கிரஸ் கூட்டணி கூறியது. அதை தமிழக மக்கள் முழுமையான புரிதல் இல்லாமல் நம்பியதன் காரணமாகத்தான் இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை எனக் குறிப்பிட விரும்புகிறேன். மேலும் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கை எல்லாம் இந்தியா முழுவதும் இந்திய மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்றார்.