மாநில அளவிலான ஹாக்கி: அரியலூர் அணி 2 ஆம் இடம்
By DIN | Published On : 06th March 2019 09:20 AM | Last Updated : 06th March 2019 09:20 AM | அ+அ அ- |

மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் இரண்டாமிடம் பிடித்த அரியலூர் அணிக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி லீக் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 6 மண்டலத்துக்கு 2 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டன. இதில், அரியலூர் மாவட்ட ஹாக்கி அணி மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை அரியலூர் அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமார் ராஜா தலைமை வகித்து, வீரர்களைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். விழாவில், அரியலூர் மாவட்ட ஹாக்கி இந்திய சங்கச் செயலர் பாரதிதாசன், துணைச் செயலர் யோகநாதன், மதுரை விளையாட்டு விடுதி மேலாளர் லெனின், பசுபதி ஹாக்கி கழகச் செயலர் குணசேகரன், ஹாக்கி இந்தியா நிர்வாகக் குழு உறுப்பினர் மகேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.