தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
By DIN | Published On : 15th May 2019 08:48 AM | Last Updated : 15th May 2019 08:48 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள தண்டலை மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாலையா(60). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சீனிவாசன்(47) என்பவருக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து பாலையா தனது இடத்தில் எல்லைக் கல்லை நட்டு, கம்பி வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் சீனிவாசன் மற்றும் அவரது உறவினரான மணிகண்டன்(29) ஆகிய இருவரும் சேர்ந்து கம்பி வேலியை சேதப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாலையா மகன் பாரதிராஜா(32), தனது செல்லிடப்பேசியில் விடியோ எடுத்துள்ளார். இதைக் கவனித்த சீனிவாசனும், உறவினர் மணிகண்டனும் சேர்ந்து பாலையாவையும், அவரது மகன் பாரதிராஜாவையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். புகாரின் பேரில் சீனிவாசன், மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர் .