அரியலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 19th May 2019 09:14 AM | Last Updated : 19th May 2019 09:14 AM | அ+அ அ- |

அரியலூரில் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகனங்களுக்கென தமிழக அரசு சிறப்பு விதிகளை 2012- இல் அறிவித்தது. இதில், பள்ளி வாகனங்கள் 22 விதிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்படுகிறதா என்பதை ஆண்டுதோறும் மே மாதம், மாநிலம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி அரியலூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்தேவராஜ் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன், கோட்டாட்சியர் சத்தியநாராயணன், முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில், 200 பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தமிழக அரசின் விதிகள் பின்பற்றப்படுகிறதா என சோதனை செய்யப்பட்டது. மேலும், வாகன உரிமம், காப்பீடு, தகுதிச் சான்று, தீயணைப்புக் கருவி, அவசர வழி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் சுமார் 10 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சரி செய்ய உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இந்த ஆய்வில் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், சாலையில் செல்வது எவ்வாறு என்பது குறித்தும் பெற்றோர்களை விட ஓட்டுநர்களாகிய நீங்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். மேலும், வாகனங்களை நீங்கள் ஓட்டும் போது அதனை கவனிக்கும் குழந்தைகள் அதையே பின்பற்ற நினைக்கும். எனவே, நல்ல முறையில் வாகனங்களை ஓட்டுநர் ஓட்ட வேண்டும் என்றார்.