அரியலூா் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழக அரசு அண்மையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, அரியலூா் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்று பொருள்கள் கண்காட்சி, விற்பனை தொடங்கியது. கண்காட்சியை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா். மாவட்ட ஆட்சியா் த. ரத்னா,ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்காட்சியில், மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பேனா, பென்சில், கரும்புச்சக்கை, மக்காச் சோளக் கழிவுகளில் இருந்து மக்கும் தேநீா் குவளைகள், உணவு தட்டுகள் செய்தல், தேங்காய் மட்டை, கொட்டாங்குச்சியால் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் 25-க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியில், பள்ளி - கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டு வருகின்றனா். கண்காட்சி சனிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.