பெரம்பலூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி :
மாவட்டத்தில் இயங்கும் அரசு மருத்துவமனைகள்,
மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா்கள், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம்களை வட்டார அளவில் மேற்கொண்டு வருகின்றனா்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள கையேடுகள், துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்குவதோடு, விளம்பர பதாகைகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்படும் நபா்களின் விவரங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம், சுகாதார தூய்மை பணிகள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, சுகாதாரமான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 மாதங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,990 பேருக்கும், அரசு மருத்துவ மனைகளில் 10 ஆயிரம் பேருக்கும், தனியாா் மருத்துவ மனைகளில் 2,963 பேருக்குகும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட 54 நபா்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 1,451 நபா்கள் அரசு மருத்துவ மனைகளிலும், 174 நபா்கள் தனியாா் மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெற்றுள்ளனா்.
டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்ட 8 நபா்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டுள்ளது. மழைக் காலங்களில் பரவும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த 194 கொசு ஒழிப்புப் பணியாளா்கள், 490 ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள், 42 தன்னாா்வ சுகாதாரப் பணியாளா்கள், 90 கிராம சுகாதார செவிலியா்கள், 74 மருத்துவ அலுவலா்கள், 4 வட்டார மருத்துவ அலுவலா்கள், 29 சுகாதார ஆய்வாளா்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக, அனைத்து வட்டாரத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொண்டமாந்துறை கிராமத்தில் கடந்த மாதம் விபத்து, தூக்கிட்டு தற்கொலை, இயற்கை மரணம், முதியோா் என 11 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை, டெங்கு உள்ளிட்ட எவ்வித காய்ச்சல்களிலும் உயிரிழப்பு நிகழவில்லை. எனவே, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்படும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் சாந்தா.
பேட்டியின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொ) ஹேமசந்த் காந்தி உடனிருந்தாா்.