இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்
By DIN | Published On : 01st September 2019 02:23 AM | Last Updated : 01st September 2019 02:23 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 1) தொடங்கி, இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையம் செப்.1 முதல் செப்.30 வரை வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது, வாக்காளர் பட்டியலின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது ஆகும்.
இத்திட்டத்தின்படி வாக்காளர்கள் தாங்களாகவே, தங்களது வாக்காளர் பட்டியல் விபரங்களை சரிபார்க்கலாம். இதுமட்டுமல்லாமல், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வீடு வீடாக சென்று வாக்காளர் விபரங்களை சரிபார்க்கவும், தகுதியுள்ள விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர், பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவினர் வகை, புகைப்படம் மற்றும் பாலினம் குறித்த பதிவுகளை தாங்களே சரிபார்த்துகொள்ளவும், திருத்தங்கள் ஏதும் இருப்பின் அவைகளை குறிப்பிடவும் பின்வருமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை என்ற செல்லிடப் பேசி செயலி மூலமாகவும், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள வாக்காளர் உதவி மையம், பொதுச் சேவை மையங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவும் தங்களது தகவல்களை சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் தங்களது விபரங்களை திருத்தும் பட்சத்தில், அதற்கான அடையாள ஆவணங்களின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், வரும் 15ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெளியிடப்படும்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியின்படி 18 வயது பூர்த்தியாகுபவர்கள் அல்லது கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக பிறந்தவர்கள், வருகின்ற செப். 15ஆம் தேதி முதல் செப்.30ஆம் தேதிக்குள், அனைத்து வேலை நாள்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலரை அணுகி புதிய வாக்காளராக இணைந்து கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G