விழுப்புரம்-மதுரை பாசஞ்சர் ரயில் தினமும் தாமதம்: பயணிகள் புகார்
By DIN | Published On : 01st September 2019 02:22 AM | Last Updated : 01st September 2019 02:22 AM | அ+அ அ- |

விழுப்புரம்-மதுரை பாசஞ்சர் ரயில் தினமும் தாமதமாக வருவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விழுப்புரம்-மதுரை இடையே இரு மார்க்கத்திலும் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் பிற்பகல் 3.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிலையங்களில் நின்று சென்று, இறுதியாக நள்ளிரவு 12.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைகிறது. அதேபோன்று மறு மார்க்கத்தில் அதிகாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, பாசஞ்சர் ரயில் விழுப்புரம் சென்றடைகிறது.
இந்த இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களால் மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மிகந்த பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.
அதேசமயம், விழுப்புரம் - மதுரை பாசஞ்சர் ரயில் கடந்த ஓராண்டுக்கு மேலாக எந்த ஒரு ரயில் நிலையத்திலும் உரிய நேரத்தில் வருவதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அரியலூருக்கு தினமும் மாலை 5.50 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் மாலை 6.45, இரவு 7, 8 மணிக்கு வந்து சேர்வதால் இங்கிருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்லக்கூடிய பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பெண்கள், மாணவிகள் உரிய நேரத்துக்கு வீட்டுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
பயணிகள் கருத்து: திருச்சி மாவட்டத்தில் இருந்து அரியலூரில் பணியாற்றும் ஆசிரியர்கள் இதுகுறித்து கூறுகையில், ""அரியலூரில் உள்ள 6 சிமென்ட் ஆலைகள், பள்ளி, கல்லூரிகள், மத்திய, மாநில அரசுஅலுவலகங்கள் என அனைத்து துறைகளிலும் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தான் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் மதுரை-விழுப்புரம், விழுப்புரம்-மதுரை பாசஞ்சர் ரயிலில் பயணிக்கின்றனர். ஆனால், ரயில்கள் உரிய நேரத்துக்கு வருவதில்லை'' என்றனர்.