வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு
By DIN | Published On : 02nd September 2019 05:44 AM | Last Updated : 02nd September 2019 05:44 AM | அ+அ அ- |

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு, குடும்பத்தினரின் ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு கல்வித்தகுதியை பதிவு செய்து, மேற்கொண்டு தொடர்ந்து புதுப்பித்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை மூன்றாண்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கு பயனாளியின் தாய், தந்தை அல்லது கணவன் அல்லது மனைவி ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-லிருந்து ரூ.72,000-வரை வருமான உச்சவரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம்.