பாதை பிரச்னை: பெண் தீக்குளித்து தற்கொலை - 12 பேர் மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பொது பாதை பிரச்னையில் சனிக்கிழமை மாலை தீக்குளித்த பெண்கள் இருவரில் மாமியார்


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பொது பாதை பிரச்னையில் சனிக்கிழமை மாலை தீக்குளித்த பெண்கள் இருவரில் மாமியார் உயிரிழந்தார். அவரது மருமகள் காயமடைந்தார். இதுதொடர்பாக 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

குன்னம் அருகேயுள்ள அல்லிநகரம் ஊராட்சிக்குள்பட்ட மேல உசேன் நகரம் கிராமப் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இக்கிணறுகளை சுற்றி சுற்றுச்சுவர், மின் மோட்டார் மற்றும் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. 
மின் மோட்டார் அறை அருகே  ராமதாஸ் மனைவி பூங்கொடி (56) வீடு கட்டி வசித்து வருகிறார். 

மின் மோட்டார் அறை உள்ள பகுதி தனது வீட்டுக்குச் செல்லும் பாதை எனக்கூறி, கடந்த 2006 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் பூங்கொடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2017-இல் பூங்கொடிக்கு பாதை அமைத்துத்தர வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அல்லிநகரம் ஊராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில், பழுது காரணமாக புதிதாக ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தும் பணி தொடங்கியது. 

இதற்கு, பூங்கொடி எதிர்ப்பு தெரிவித்ததால், அல்லிநகரம் ஊராட்சி செயலர் கலையரசி, குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, மேல மற்றும் கீழ உசேன் நகரம் கிராம மக்கள் குடிநீர் கோரி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களின் உத்தரவின்பேரில் டேங்க் ஆபரேட்டர் சுப்பிரமணி, எலக்ட்ரீசியன் சுப்ரமணியன், ஊராட்சி செயலர் கலையரசி ஆகியோர் சனிக்கிழமை மாலை மின் மோட்டார் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.   

இதையறிந்து, அலுவலர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் மனைவி பூங்கொடி (56), அவரது மருமகள் தங்கலட்சுமி (33) ஆகியோர் தங்களது உடலில் மண்ணெண்ணெய்யை  ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பூங்கொடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 12 பேர் மீது வழக்கு:
இதுகுறித்து, தங்கலட்சுமி, குன்னம் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் , ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் கலையரசி, முன்னாள் ஊராட்சித் தலைவர் மோகன், டேங்க் ஆபரேட்டர் சுப்ரமணி, எலக்ட்ரீசியன் சுப்ரமணியன் உள்ளிட்ட 12 மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com