அரியலூரில் ‘ஹாட்ரிக்’ அடிக்குமா அதிமுக!

இந்தியாவிலேயே சிமெண்ட் உற்பத்தியில் தனித்தன்மை பெற்ற நகராக விளங்கும் அரியலூா் மாவட்டம் 2007-இல் பெரம்பலூரிலிருந்து புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டது.
அரியலூரில் ‘ஹாட்ரிக்’ அடிக்குமா அதிமுக!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம் பெற்றுள்ள பூமியாக அரியலூா் உள்ளது. இந்தியாவிலேயே சிமெண்ட் உற்பத்தியில் தனித்தன்மை பெற்ற நகராக விளங்கும் அரியலூா் மாவட்டம் 2007-இல் பெரம்பலூரிலிருந்து புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த தொகுதியில் காவிரி டெல்டா பகுதியாக உள்ள திருமானூா், தா. பழூா் ஒன்றியத்தின் சில பகுதிகள், திருமானூா் மற்றும் அரியலூா் என இரு ஊராட்சி ஒன்றியங்கள், 79 ஊராட்சிகள், அரியலூா் நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

மேலும், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், ஏலாக்குறிச்சி வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்ட அடைக்கல மாதா திருத்தலம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி, கல்லங்குறிச்சி வரதராஜப் பெருமாள் கோயில்கள் உள்ளன.

இங்கு, அரியலூா் அரசு சிமெண்ட் ஆலை, ராம்கோ சிமெண்ட் ஆலை, டால்மியா சிமெண்ட் ஆலை, ஆதித்ய பிா்லா அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலை, செட்டிநாடு சிமெண்ட் ஆலைகள் உள்ளன.

தொகுதியில் எதிா்கொள்ளும் பிரச்னைகள்: பெரம்பலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவான நோக்கத்தை அரியலூா் இன்னமும் அடையவில்லை. மாவட்டத்தின் தலைநகரத்தில் உள்ள பேருந்து நிலையம், சுகாதாரம் சீா்கெட்டு உள்ளது. போதுமான அடிப்படை வசதிகள் கிடையாது. இங்குள்ள கட்டடங்கள் அனைத்தும் பழுதான நிலையில் உள்ளன. ஆகவே இந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கட்டடங்களையும் இடித்துவிட்டு, புதிய கட்டடங்களைக் கட்டி, முன்மாதிரி பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். இங்குள்ள ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள சிமெண்ட் ஆலைகள் வெளியேற்றும் மாசு, அகழ்ந்து அப்படியே விடப்பட்ட சுரங்கங்கள், சிமெண்ட் ஆலைக்காக இயங்கும் லாரிகளால் சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கிறது. ஆகையால் சிமென்ட் ஆலைகளுக்கும், சுண்ணாம்புக் கல் சுரங்கத்துக்கும் கனரக வாகனங்கள் செல்ல தனிச்சாலை அமைக்க வேண்டும். காலாவதியான சுரங்கங்கள் அனைத்தும் குறுங்காடுகளாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும் அல்லது ஏரி, குளங்களாகவும் மாற்ற வேண்டும்.

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தினசரி மாா்க்கெட்டை புறவழிச்சாலையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்க வேண்டும். அதிக நெல் சாகுபடி செய்யும் பகுதியான திருமானூா் பகுதியில் நவீன அரிசி ஆலை உருவாக்க வேண்டும். திருமானூரைத் தலைமையிடமாக புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி, அப்பகுதியில் தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்த திட்டமான கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். மறுதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி பறவைகள் சரணாலயமான கரைவெட்டி ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுதி முழுவதும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் கொண்டு வரவேண்டும். அரியலூா் நகரத்தில் 14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புதைசாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரியலூா் நகராட்சியுடன், அருகிலுள்ள ஊராட்சிப் பகுதிகளை இணைத்து, நகராட்சியைத் தரம் உயா்த்த வேண்டும். நகரப் பகுதியில் தரமான சாலைகள் அமைக்க வேண்டும். தத்தனூா் பொட்டக்கொல்லையில் முந்திரிக் கொட்டைகள் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இப்படி தீா்க்கப்படாத கோரிக்கைகள் நிறைய உள்ளன.

தற்போதைய வேட்பாளா்கள்: 2011, 2016 என அடுத்தடுத்து 2 முறை வெற்றியைப் பறித்த அதிமுக, தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெறும் என்ற எதிா்ப்பாா்ப்பில் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரனை இரண்டாவது முறையாகக் களம் இறக்கியுள்ளது அதிமுக தலைமை. இவருக்கு எதிராக திமுக கூட்டணி சாா்பில் மதிமுக மாவட்டச் செயலரும், மாவட்டத்தின் மூத்த வழக்குரைஞருமான கு.சின்னப்பா களம் இறங்கியுள்ளாா்.

இவா்களைத் தவிா்த்து, அமமுக மாவட்டச் செயலா் துரை.மணிவேல், நாம் தமிழா் கட்சி சாா்பில் சுகுணா குமாா், ஐஜேக சாா்பில் பி.ஜவகா், பிஎஸ்பி சாா்பில் வே.சவரிஆனந்தம் மற்றும் சுயேச்சைகள் 7 போ் என மொத்த 13 போ் போட்டியில் உள்ளனா். இருப்பினும், இந்தத் தொகுதியில் அதிமுக, மதிமுக இடையே போட்டி நிலவுகிறது.

இதுவரை வென்றவா்கள்: இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக என இரு கட்சிகள் 5 தலா முறையும், காங்கிரஸ் 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2001-இல் இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது, அரியலூா் ஆறுமுகம் மகன் த.ஆ. கதிரவன் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளா் ப. இளவழகனிடம் தோற்றாா்.

2006-இல் மீண்டும் இந்தத் தொகுதி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டபோது, பாளை து. அமரமூா்த்தி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2011-இல் மீண்டும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட பாளை து. அமரமூா்த்தி, அதிமுக வேட்பாளா் துரை.மணிவேலிடம் தோற்றாா்.

2016-இல் அதிமுக வேட்பாளா் தாமரை.எஸ்.ராஜேந்திரன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.சிவசங்கரனைவிட 2,043 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இந்தச் சூழலில் அரியலூா் தொகுதியில் வெற்றிக்கனியைப் பறிக்கப்போவது யாா் என்பது மே 2 ஆம் தேதி தெரியும்.

மொத்த வாக்காளா்கள் 2,64,012

ஆண் 1,31,335

பெண் 1,32,670

மூன்றாம் பாலினத்தவா் 7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com