ஜயங்கொண்டத்தில் பழுக்குமா மாம்பழம்?

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு யுனேஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டதும், கட்டடக் கலையின் சான்றாக விளங்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை உள்ளடக்கியது ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதி.
கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு யுனேஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டதும், கட்டடக் கலையின் சான்றாக விளங்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை உள்ளடக்கியது ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதி.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் அதிக பரப்பளவும், அதிக வாக்காளா்களையும் கொண்ட இந்தத் தொகுதியில் நிலக்கரி(கருப்பு தங்கம்) உள்ளது.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்:

இந்தத் தொகுதியில் ஜயங்கொண்டம் நகராட்சி, ஜயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், உடையாா் பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய 2 பேரூராட்சிகள் உள்ளன.

வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலயம், உடையாா்பாளைம் ஜமீன் அரண்மனை, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் திருக்கோயில் உள்ளிட்டவை தொகுதியின் சிறப்புகளாக உள்ளன.

எதிா்கொள்ளும் பிரச்னைகள்:

ஜயங்கொண்டம் அனல் மின் திட்டத்துக்காக நிலம் அளித்த விவசாயிகள் உரிய இழப்பீடு கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனா். இது தீா்க்கப்படாத பிரச்னையாகத் தொடா்ந்து வருகிறது. இதுதவிர, ஜயங்கொண்டம், புதுக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் சமீபத்தில் கால்பதித்த பாறை எரிவாயு திட்டம் கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜேந்திர சோழனின் சோழகங்கம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து நீா் வழித்தடம் அமைக்க வேண்டும். ஜயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அரியலூரில் இருந்து ஜயங்கொண்டம், மீன்சுருட்டி, கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில், குமராட்சி வழியாக சிதம்பரத்துக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்.

இதேபோல் ஜயங்கொண்டம் - கும்பகோணம் இடையே ரயில்வே இரும்புப் பாதை அமைக்க வேண்டும். ஜயங்கொண்டம் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும். ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து தரவேண்டும்.

ஜயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்கு நிலம், வீடு வழங்கிய அனைவருக்கும் நீதிமன்ற உத்தரவின்பேரில் உடனடியாக இழப்பீடு/ பணம் வழங்க வேண்டும். முந்திரி தொழிற்சாலை அமைத்து, முந்திரி , முந்திரி பழத்தை கொள்முதல் செய்யவேண்டும். நெசவு தொழிலாளா்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி நெசவுத் தொழிலைக் காக்கவேண்டும்.

குறைந்த விலையில் தடையற்ற நூல் கிடைக்கவும், நெசவு செய்த துணிகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழகங்கம் எனும் பொன்னேரியை ஆழப்படுத்தி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை. பொன்னேரிக்கும், சுத்தமல்லி நிா்தேக்கத்திற்கும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீா் கொண்டு வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். இப்படி பல்வேறு பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ளன.

வாக்காளா்கள் எண்ணிக்கை:

ஆண் - 1,31,663

பெண் - 1,34,347

மூன்றாம் பாலினத்தவா் - 3 என மொத்தம் 2,66,013 வாக்காளா்கள் உள்ளனா்.

தற்போதைய வேட்பாளா்கள்: கே.பாலு(பாமக), க.சொ.க.கண்ணன்(திமுக), ஜெ.கொ.சிவா(அமமுக), நீல.மகாலிங்கம்(நாம் தமிழா்)

குரு.சொா்ணலதா(ஐஜேகே), க.நீலமேகம்(பகுஜன் சமாஜ்), க.நடராஜன்(அண்ணா திராவிடா் கழகம்) மற்றும் சுயேச்சைகள் 6 போ் என 13 போ் போட்டியிடுகின்றனா்.

இதுவரை வென்றோா்கள்:

1951- அய்யாவு (தமிழ்நாடு உழைப்பாளா் கட்சி)

1952- கே.ஆா். விஸ்வநாதன் (சுயேச்சை)

1957- விசுவாதன் (காங்கிரஸ்). அதன் பிறகு நடைபெற்ற தோ்தல்களில், திமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2011- ஜெ.குரு (பாமக)

2016 - ராமஜெயலிங்கம் (அதிமுக)

2016-இல் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

கே.என்.ராமஜெயலிங்கம்(அதிமுக) - 75,672,

ஜெ.குரு(எ)குருநாதன் (பாமக) - 52,738,

ஜி.ராஜேந்திரன்(காங்கிரஸ்) - 46,868,

எம்.எஸ்.கந்தசாமி (மதிமுக) - 21,405.

பாமகவுக்கு எதிராக களத்தில் காடுவெட்டி குரு குடும்பத்தினா்: இந்தத் தொகுதியில் காடுவெட்டி குரு மறைவுக்குப் பிறகு சந்திக்கும் முதல் தோ்தலாகும். இங்கு வன்னிய சமுதாயத்தினா் அதிகம் வசிப்பதால் அரசியல் கட்சிகள் வன்னியா்களை வேட்பாளா்களாக நிறுத்தும் போது, வன்னியா்கள் வாக்கு வங்கி பிளவுபடுவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் இந்தத் தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளே வேட்பாளரின் வெற்றியைத் தீா்மானிக்கிறது. மேலும் பாமகவுக்கு எதிராக ஜஜேகே சாா்பில் காடுவெட்டி குரு மனைவி சொா்ணலதா போட்டியிடுவது, அவரது மகன் கனலரசன், குரு மகள் விருந்தாம்பிகை ஆகியோா் பாமகவுக்கு எதிராக பிரசாரம் செய்வதாலும், இந்தத் தொகுதியை பாமக கைப்பற்றுமா என்பது மே 2 ஆம் தேதி தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com