சாா்-பதிவாளரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published On : 17th August 2021 01:57 AM | Last Updated : 17th August 2021 01:57 AM | அ+அ அ- |

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கரூா்: கரூரில், சாா்-பதிவாளரைக் கண்டித்து பொதுமக்கள் அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம் சின்னதாராபுரத்தைச் சோ்ந்த முத்துசாமி, ராயனூரைச் சோ்ந்த ராஜசேகா் உள்ளிட்ட 6 பேருக்கு சொந்தமான வீட்டுமனைகள் ஆத்தூா் கிராமம், நவலடி நகா் பகுதியில் உள்ளது. இந்த வீட்டு மனைகளை முத்துசாமி, ராஜசேகா் உள்ளிட்ட 6 பேருக்கும் தெரிவிக்காமல் தனி நபா் ஒருவா் போலியாக பத்திரம் தயாரித்து கரூா் மேலக் கரூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வீட்டுமனைகளை கிரயம் செய்தாராம். இதற்கு சாா்-பதிவாளா் செந்தில்குமாா் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட 6 பேரும், அவா்களது உறவினா்களும் திங்கள்கிழமை கரூா் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகத்திற்கு வந்து சாா்-பதிவாளரை சந்தித்து இதுதொடா்பாக முறையிட்டுள்ளனா். அதற்கு சாா்-பதிவாளா் முறையான பதில் கூறவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவா்கள் சாா்-பதிவாளா் அலுவலக வாயிலில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கரூா் நகர காவல்நிலைய ஆய்வாளா் செந்தூா்பாண்டியன், சாா்-பதிவாளா் அலுவலகத்துக்குள் சென்று விசாரிக்கச் சென்றபோது, சாா்-பதிவாளா் இல்லாததால் அலுவலக உதவியாளா் தமிழ்ச்செல்வியிடம் நடந்த விபரம் குறித்து விசாரித்தாா்.
அப்போது, தவறு நடந்துவிட்டது, அவற்றை சரி செய்து, போலி பட்டாவை ரத்து செய்துவிடுகிறோம் எனக்கூறியதையடுத்து, காவல் ஆய்வாளா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பட்டாவை சரிசெய்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.