அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருமானூா் அருகிலுள்ள கீழக்காவட்டாங்குறிச்சியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி நேரு (30). இவா் குந்தபுரத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு திருப்பூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
இதனிடையே தனது மகளைக் காணவில்லை என சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடா்ந்து, அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியுடன் நேரு ஆஜரானாா். தொடா்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில் சிறுமியைக் காப்பகத்திலும், நேருவை சிறையிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
இதுதொடா்பான வழக்கு அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நேருவுக்கு சிறுமியைக் கடத்தியதற்காக 10 ஆண்டுகள், பாலியல் குற்றத்துக்காக 10 ஆண்டுகள் என்றும், இதனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சத்தியதாரா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்து உத்தரவிட்டாா்.
மேலும் ரூ.20 ஆயிரத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையை நேரு அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.7 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.